Tuesday, Aug 04, 2020, 11:00:39
தலைப்பு :

இந்த வருட சிபிஎல் போட்டியிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!

நிருபரின் பெயர் : Arsha
  • புதுப்பிப்பு நேரம் : Jun 24, 2020 Wednesday
  • 50 views

இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.



இந்த வருட சிபிஎல் டி20 போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து செயிண்ட் லுசியா அணிக்கு மாறியுள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். இந்த வருட சிபிஎல் போட்டிக்கு கெயிலைத் தக்கவைக்க ஜமைக்கா அணி விரும்பவில்லை. கேபிஎச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் சிபிஎல் டி20 போட்டியின் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூயிஸை வாங்கியது. ஆண்டி பிளவர் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நிர்ணயிக்கப்பட்டார். தற்போது செயிண்ட் லூயிஸ் அணி, ஜமைக்கா அணியிலிருந்து நீக்கப்பட்ட கிறிஸ் கெயிலைத் தேர்வு செய்துள்ளது. சிபிஎல் போட்டியில் முதல் நான்கு சீஸனில் ஜமைக்கா அணிக்காக கெயில் விளையாடினார். அடுத்த இரு வருடங்களுக்கு வேறு அணியில் விளையாடிய கெயில் மீண்டும் ஜமைக்கா அணிக்கு வந்தார். ஆனால் கடந்த சீஸனில் 10 ஆட்டங்களில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜமைக்கா அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.



எனினும் சிபிஎல் போட்டியில் ஜமைக்கா அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என கெயில் குற்றம் சாட்டினார். ராம்நரேஷ் சர்வான், கரோனா வைரஸை விடவும் நீங்கள் தீங்கானவர் என்று கெயில் சொன்னது சர்ச்சைக்கு ஆளானது. கெயிலின் குற்றச்சாட்டுகளை சர்வானும் ஜமைக்கா அணியும் மறுத்தார்கள். சிபிஎல் விதிமுறைகளை பின்பற்றாததால் தண்டனையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறினார். இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் கெயில். இதனால் கெய்ல் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என சிபிஎல் நிர்வாகம் முடிவெடுத்தது.



இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.



சிபிஎல் போட்டி ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெறவுள்ளது.


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com