கேரளாவின் சில பகுதிகளில் இன்றும்(திங்கட்கிழமை) நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை ஆரம்பமானது. முதலில் போதுமான அளவு மழை பொழிவு கிடைக்கவில்லை.
எனினும் இம்மாத ஆரம்பத்திலிருந்து தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கேரளாவில் பல மாவட்டங்களும் கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் பாரியளவில் மண்சரிவு ஏற்பட்டதால் பலரும் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளும் இடிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து மழை குறைவடைந்து இயல்புநிலை திரும்ப தொடங்கியதால் முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
இந்த நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என கொச்சி வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களிலேயே இவ்வாறு கன மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்போது பலத்த காற்று வீசும் எனவும், பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த 5 மாவட்டங்களிலும் அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
previous post