சில முக்கிய பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாப்படாமல் இந்தியாவினால், ஒரு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கவே முடியாது என உட்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீரை நாடாளுமன்றம் அங்கீகரித்துவிட்டது.
630 சமஸ்தானங்கள் கொண்ட இந்தியாவை முதல் உட்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஒருங்கிணைத்தார். அன்று ஜம்மு காஷ்மீர் விடுபட்டுபோனது. இப்போது அந்த குறை நீக்கப்பட்டுவிட்டது.
போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்தியா திணறி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல், இந்தியா ஒரு வளர்முக நாடாக உருவெடுக்கவே முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.