இந்தியா தமிழ்நாடு

வரும் சட்டமன்ற தேர்தலில் 10 மாவட்ட விவசாயிகளின் வாக்குகள் நோட்டாவுக்கே : வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் தேன்கனிக்கோட்டையில் தீர்மானம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 10 மாவட்ட விவசாயிகளின் வாக்குகள் நோட்டாவுக்கே : வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் தீர்மானம்

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்ட விவசாயிகளின் வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வனவிலங்கு பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் தீர்க்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோலப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், வனவிலங்கு பிரச்சினையை தீர்க்காத அரசியல் கட்சிகளுக்கு வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் விவசாயிகள் வாக்குகளை செலுத்தக்கூடாது எனவும், விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அனைத்து வாக்குகளும் நோட்டாவுக்கு செலுத்துவோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

இது குறித்து பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள் மான்கள், குரங்குகள், மயில்கள் போன்ற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இந்த வனவிலங்குகள் அதிக அளவில் விவசாயத்தை அழித்து வருகின்றன. இதனால் விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயத்தை அழிக்கும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் மக்கள் கேட்காத பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் வனவிலங்குகள் பிரச்சினையை தீர்க்காத காரணத்தினால் இந்த தேர்தலில் விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தார் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கிறோம் என தெரிவித்தனர்.