இலங்கை

5000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்களுக்கு 15 ஆம் திகதி வழங்க ஏற்பாடு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு அதனை எதிர்வரும் 15ஆம் திகதியன்று வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசு தொற்று பரவலினால் பாதிப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டம் இன்றும் இடம்பெற்றது.

ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த கொடுப்பனவு ஒரு பயனாளி குடும்பத்திற்கு ஒரு பிரிவின் கீழ் மட்டுமே வழங்கப்படும் என்று இந்த கொடுப்பனவு தொடர்டபாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிகெ;கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஒரு வீட்டு குடும்பத்திற்கு உட்பட்டதாக வீட்டு குடும்ப தலைவரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதான குடும்ப அலகிற்கும் பிரதான குடும்ப அலகிற்கு மேலதிகமாக இணைந்த குடும்பம் என்ற ரீதியில் வாழும் குடும்பத்திற்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக , 1,700,000 சமுர்தி பெறுநர் குடும்பங்கள், சமுர்தி பயனை பெறுவதற்கு காத்திருக்கும் பட்டியலில் உள்ள 780,000 குடும்பங்கள், சமுர்த்தி மேல்முறையீட்டுபட்டியலில் உள்ள 726,000 குடும்பங்கள், முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 626,000 குடும்பங்கள், ஊனமுற்றோர் கொடுப்பனவு பெறும் 123,000 குடும்பங்கள், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை பெறும் 44,400 குடும்பங்கள் மற்றும் கிராம குழு மற்றும் பிரதேச செயலாளர்களின் பரிந்துரைகளின்படி வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் உள்ளிட்டோருக்காக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலும் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்றது. இந்த மாவட்டத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

எட்டியந்தொட்ட பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.