விளையாட்டு

ஐ.பி.எல்.: பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்ய குமார் யாதவ் 56 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஆந்ரே ரஸ்ஸல் 5 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி, சகிப் அல் ஹசன் மற்றும் பிரசீத் கிருஸ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிதிஷ் ரணா 57 ஓட்டங்களையும் சுப்மான் கில் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ராகுல் சஹார் 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் குர்ணல் பாண்ட்யா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் ராகுல் சாஹர் தெரிவுசெய்யப்பட்டார்.