இலங்கை பிரதான செய்திகள்

அடக்குமுறைகள் மீண்டும் மீளெழுச்சி பெறுகின்றதா ? – ஊடக அமைப்புக்கள் கேள்வி

நாட்டின் பிரஜைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை கிடையாது.

அதுமாத்திரமன்றி அண்மைக்காலத்தில் ஊடகங்களின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளன.

ஊடகவியலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும் - ஊடக  அமைப்புகளின் கூட்டணி கோரிக்கை | SiyaneNews.com | Radio | Siyane Media Circle

இவையனைத்தையும் பார்க்கும்போது, 2005 – 2015 வரையான காலப்பகுதியில் கருத்துச்சுதந்திரம் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட  அடக்குமுறைகள் மீண்டும் மீளெழுச்சி பெறுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது.

ஜனநாயகத்திற்குப் புறம்பான இவ்வனைத்துச் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும்.

இல்லாவிட்டால், இவையே அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவுறுவதற்குக் காரணமாகிவிடும் என்று 6 ஊடக அமைப்புக்கள் இணைந்து கூட்டாக  குறிப்பிட்டுள்ளன.

கொவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் நடைபெறும் ஜனநாயகவிரோத செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சீதா ரஞ்சனி, ஊடகத்தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் உபதலைவர் எம்.ஏ.எம்.நிழாம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் பொருளாளர் எம்.எப்.எம்.பஸீர் மற்றும் தமிழ் ஊடக ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்றது.

அங்கு மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட கருத்துக்களில் தொகுப்பு வருமாறு:

நாட்டில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் அண்மைக்காலத்தில் பாரியதொரு சவாலுக்குள்ளாகியிருக்கின்றது.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில், தமது பிரச்சினைகளையும் உரிமைகளையும் முன்வைத்து உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி கடந்த 7 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 7 ஆர்ப்பாட்டங்கள் பொலிஸாரினால் அடக்கப்பட்டன. 

அதேபோன்று கடந்த 8 ஆம் திகதி ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரிதிநிதிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களால் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் புகுந்த பொலிஸார் அவர்களை வலுகட்டாயமாக இழுத்துச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றியதை காணொளிகள் மூலம் பார்க்கமுடிந்தது.

அதுமாத்திரமன்றி அவர்களுக்கு சிறைத்தண்டனையை வழங்குவதுபோன்ற அடிப்படையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குறைந்தபட்சம் நீதிமன்றத்தின் உத்தரவுகூட இல்லாமல் வலுகட்டாயமாக அழைத்துச்சென்று தனிமைப்படுத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டமைப்பு பல்வேறுபட்ட தரப்பினரும் எதிர்ப்புவெளியிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

எனினும் அவை பொலிஸாரால் அடக்கப்படும் அதேவேளை, அதற்கு பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார். கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகளிலும் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் மூலம் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறிருக்கையிலேயே அண்மைக்காலத்தின் மக்களின் கருத்துச்சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதுடன் அவர்கள்மீது அடக்குமுறையும் பிரயோகிக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.

மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான அல்லது அவர்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை அரசாங்கத்திடம் இல்லாததன் காரணமாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின்மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது.

சமூகவலைத்தளங்களில் பதிவுகளைச் செய்தல் மற்றும் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடல் ஆகியவை தொடர்பிலும் அரசாங்கத்தினால் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குறிப்பாக ‘சிரச’ ஊடகநிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவரும் நடவடிக்கை தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவரால் பாரளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இருப்பினும் அதற்குரிய தெளிவுபடுத்தலை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் அங்கம்வகிக்கும் பெரும்பான்மையானோரால் நாடு ஆட்சிசெய்யப்பட்ட கடந்த 2005 – 2015 வரையான காலப்பகுதியில் ஊடகநிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அனைவரும் நன்கறிவார்கள்.

அக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றனவா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

ஜனநாயகத்திற்குப் புறம்பான இவ்வனைத்துச் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால், இவையே அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவுறுவதற்குக் காரணமாகிவிடும் என்று குறிப்பிட்டனர்.

Related posts

யாழ்.கோண்டாவிலில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது வாள் வெட்டு

Rajith

மன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு!

admin

உக்ரைனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா

admin

Leave a Comment