விளையாட்டு

பரபரப்பான மகளிர் இருபது 20 சவால் கிரிக்கெட் போட்டியில் சுப்பர் நோவாஸ் அணி 3ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது

வெலோசிட்டி அணிக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை (28) இரவு நடைபெற்ற மகளிர் இருபது 20 சவால் கிரிக்கெட் போட்டியில் மிகவும் பரபரப்பான முறையில் 4 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சுப்பர் நோவாஸ் 3ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

The Supernovas players lift the Women’s T20 Challenge 2022 trophy, final, Women’s T20 Challenge, Pune, May 28, 2022

2018முதல் 3 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவந்த மகளிர் இருபது 20 சவால் கிரிக்கெட் (விமென்ஸ் ரி20 செலஞ்) அடுத்த வருடத்திலிருந்து மகளிர் ஐபிஎல் என்ற புதிய பெயரில் 6 அணிகளின் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ளது.

2018இலும் 2019இலும் சம்பியனாகியிருந்த சுப்பர்நோவாஸ், 2020இல் ட்ரெய்ல்ப்ளேஸர்ஸிடம் தோல்வி அடைந்து 2ஆம் இடததைப் பெற்றிருந்தது.

Harmanpreet Kaur cannot hide her excitement after picking up the trophy, Supernovas vs Velocity, final, Women’s T20 Challenge, Pune, May 28, 2022

கொரோனா தொற்று காரணமாக 2021இல் போட்டி நடைபெறவில்லை. இப்போது மீண்டும் சுப்பர்நோவாஸ் சம்பியனாகியுள்ளது.

இந்த வருட இறுதிப் போட்டியில் டியேண்ட்ரா டொட்டினின் சகலதுறை ஆட்டம், அலானா கிங், சொவி எக்லஸ்டோன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு என்பன சுப்பர்நோவாஸ் சம்பியனாவதற்கு பெரிதும் உதவின.

The Supernovas players and the support staff pose with the trophy, Supernovas vs Velocity, final, Women’s T20 Challenge, Pune, May 28, 2022

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியின் கடைசி ஓவரில் வெலோசிட்டியின் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

எக்லஸ்டோனின் முதலாவது பந்தில் லோரா வுல்வார்ட், சிக்ஸ் ஒன்றை விளாசினார். ஆனால் அடுத்த 5 பந்துகளை துல்லியமாக விசிய எக்லஸ்டோன் 7 ஓட்டங்களை மட்டும் கொடுத்து சுப்பர்நோவாஸ் சம்பியனாவதை உறுதிசெய்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சுப்பர்நோவாஸ் 20 ஓவர்களில் 165 ஓட்டங்களைக் குவித்தது.

பிரியா பூனியா, டியேண்ட்ரா டொட்டின் ஆகிய இருவரும் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 57 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பிரியா பூணியா 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதலாவதாக ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடன் 2ஆவது விக்கெட்டில் இணைந்த அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோருடன் மேலும் 58 ஓட்டங்களை டொட்டின் பகிர்ந்தார்.

44 பந்துகளை எதிரகொண்ட டொட்டின் 4 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

ஹார்மன்ப்ரீத் கோர் 29 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த மூவரைவிட சுப்பர்நோவாஸ் துடுப்பாட்டத்தில் வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.

வெலோசிட்டி பந்துவீச்சில் அணித் தலைவி தீப்தி ஷர்மா 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேட் குரூஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிம்ரன் பஹதூர் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெலோசிட்டி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் இளம் அதிரடி வீராங்கனைகளான ஷெவாலி வர்மா (15), யஸ்டிகா பாட்டியா (13) ஆகிய இருவரும் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுப்பர் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர்கள் இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து மூவர் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழக்க 11 ஓவர்கள் நிறைவில் வெலோசிட்டி 5 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிந்தது.

லோரா வுல்வார்ட், ஸ்நேஹ் ரானா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

ரானா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த பந்தில் ராதா யாதவ்வும் களம் விட்டகன்றார்.

மொத்த எண்ணிக்கை 117 ஓட்டங்களாக இருந்தபோது 7ஆவதாக கேட் குரூஸ் (13) ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் லோரா வுல்வார்ட், சிம்ரன் பாட்டியா ஆகிய இருவரும் துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி சுப்பர்நோவாஸுக்கு பெரும் சவால் விடுத்தனர்.

13 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்த அவர்கள் 19ஆவது ஓவர் நிறைவில் மொத்த எண்ணிக்கையை 148 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எக்லஸ்டோனின் முதல் பந்தில் வுல்வார்ட் சிக்ஸ் ஒன்றை விளாசினார். ஆனால் அடுத்த 5 பந்துகளையும் கட்டுப்பாட்டுடன் வீசிய எக்லஸ்டோன் தமது அணி சம்பியனாவதை உறுதிசெய்தார்.

லோரா வுல்வார்ட் 40 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். சிம்ரன் பாட்டியா 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் வுல்வார்ட்டுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பந்துவீச்சில் அலனா கிங் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொவி எக்லஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டியேண்ட்ரா டொட்டின் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related posts

சலாஹ்வின் இரட்டை கோலின் உதவியுடன் லிவர்பூல் அணி வெற்றி!

admin

திமுத் தலைமையில் முதல் வெற்றியை பெறுமா இலங்கை? நியூஸிலாந்துடன் மோதல்!

admin

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியிலிருந்து நெய்மர் விலகல்!

admin

Leave a Comment