உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான்.. ரிஷப் பண்ட்-ன் கார் விபத்து..உள்ளூர் போலீசார் கூறிய பரபரப்பு தகவல்இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் கார் விபத்து குறித்து ரூர்க்கே போலீஸார் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் எனக்கூறியிருப்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். விமானத்தில் செல்ல விரும்பாத பண்ட், சாலை மார்கமாக சுமார் 400 கிமீ தூரம் பயணிக்க விரும்பியுள்ளார்.
நேற்று இரவு உத்தரகாண்ட்-ல் இருந்து புறப்பட்ட அவர், அவ்வளவு தூர பயணத்திற்காக ஒரு அனுபவமிக்க ஓட்டுநரை உடன் அழைத்துச்செல்லாமல், தனியாக டிரைவிங் செய்து சென்றுள்ளார்.
இன்று அதிகாலை கார் ரூர்கி நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது ரிஷப் பண்ட் தூக்கத்தில் கலக்கத்தில் இருந்துள்ளதால், காரை ஓட்ட தடுமாறியுள்ளார். அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து உண்டான உடனேயே கார் தீப்பிடித்ததால் அங்கிருந்தோர் பண்ட்-ஐ மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலீசாரின் அறிக்கை
இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு என்ன நடந்தது என்பது குறித்து உள்ளூர் போலீசார் முதற்கட்ட தகவலை கொடுத்துள்ளனர். அதில், ரிஷப் பண்ட் மெர்சிடெஸ் பென்ஸ் GLE என்ற வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி – ஹரிதுவார் நெடுஞ்சாலை அருகே சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. தீப்பிடிப்பதற்கு முன்பாக சில முறை கார் சாலையிலேயே வேகமாக சுழன்றுள்ளது.

அதிர்ஷ்டம் தான்
பண்ட் ஓட்டி வந்த கார் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இதுபோன்ற விபத்து ஏற்பட்டு, தீப்பிடித்த பின்னரும் அவர் உயிர்பிழைத்ததே அதிர்ஷ்டம் தான். அவருக்கு தலை, கை மற்றும் வலது கால் மூட்டிலும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அவர் சுயநினைவில் தான் இருந்ததால் என்ன நடந்தது என்பதை தெளிவாக கூற முடிந்தது. பண்ட்-க்கு தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளது.

தூக்கம் தான் காரணம்
ஹரிதுவார் நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் சாலை மூடும் அளவிற்கு எந்தவித பனிப்பொழிவும் இல்லை. இதனால் அவர் தூக்கத்தில் வாகனத்தை ஓட்டி தான் விபத்து நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் அவரின் கார் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அதில் இருந்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று முயன்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.