பகலவன் TV விளையாட்டு

WPL: குஜராத் ஜயன்ட்ஸை பந்தாடிய மும்பை இண்டியன்ஸ் 143 ஓட்டங்களால் அமோக வெற்றி

மும்பை டி வை பட்டில் விளையாடரங்கில் சனிக்கிழமை (04) ஆரம்பமான அங்குரார்ப்பண இந்திய மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை சகல துறைகளிலும் விஞ்சிய மும்பை இண்டியனஸ் 143 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

ஹேய்லி மெத்யூஸ், அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், நெட் சிவர்-ப்ரன்ட், சய்க்கா இஷாக் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன மும்பை இண்டியன்ஸின் இலகுவான வெற்றிக்கு அடிகோலின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீராங்கனை யஸ்டிக்கா பாட்டியா (1) 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்த போதிலும் அடுத்த துடுப்பாட்ட வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸை பலப்படுத்தினர்.

ஹேய்லி மெத்யூஸ், நெர் சிவர்-ப்ரன்ட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

மெத்யூஸ் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 47 ஓட்டங்களையும் நெட் சிவர்-ப்ரன்ட் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹார்மன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஹார்மன்ப்ரீத் கோர் 30 பந்துகளில் 14 பவுண்டறிகளுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.

தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கருடன் மேலும் 35 ஓட்டங்களை 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த அமேலியா கேர், 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பூஜா வஸ்த்ராக்கர் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

குஜராத் ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் ஸ்னேஹ் ரானா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

206 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 15.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட குஜராத் ஜயன்ட்ஸ் 8ஆவது ஓவரில் 7ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 23 ஒட்டங்களாக இருந்தது.

அணித் தலைவி பெத் மூனி துரதிர்ஷ்டவசமாக முதலாவது ஓவரிலேயே உபாதைக்குள்ளாகி தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்த சரிந்தன.

மத்திய வரிசை வீராங்கனை தயாளன் ஹேமலதா மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவர் 8ஆவது விக்கெட்டில் மன்சி ஜோஷியுடன் 26 ஓட்டங்களையும் 9ஆவது விக்கெட்டில் மொனிக்கா பட்டேலுடன் 15 ஓட்டங்களையும் பகிர்ந்தார். மன்சி 6 ஓட்டங்களையும் மொனிக்கா 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பெத் மூனி உபாதையிலிருந்து மீளாததால் துடுப்பெடுத்தாடவில்லை. இதன் காரணமாக குஜராத் ஜயன்ட்ஸின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சில் சய்க்கா இஷாக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.1 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நெட் சிவர்-ப்ரன்ட் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமேலியா கேர் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஹார்மன்ப்ரீத் கோர்.

Related posts

வீட்டுக்கு வெளியே, தாயை நிற்க வைத்த தளபதி விஜய் …. தந்தை விளக்கம்

Suki

விக்கெட் காப்பாளர்கள் துடுப்பாட்டத்திலும் மிளிர அடித்தளம் இட்டவர் கில்கிறிஸ்ட் – சங்கா புகழாராம்

admin

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேருக்கு நடந்த கதி

Editor2

Leave a Comment